வியாழன், 28 அக்டோபர், 2010

கஷ்மீர் மக்களின் சுதந்திர விருப்பத்தைப் பற்றி கருத்தரங்கில் பேசிய அருந்ததி ராய் கருத்துக்கு முழு ஆதரவு: திருமாவளவன்

சென்னை,அக்.28:காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அருந்ததி ராய் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"காஷ்மீர் குறித்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் கருத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை. பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் ஒருவராக நான் காஷ்மீர் சென்றிருந்தேன். 'இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும்' என்று எங்களிடம் அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அருந்ததி ராய் பேசியதாகக் கூறப்படும் செய்திகளில் எந்தத் தவறும், தேச விரோதமும் இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைத் தான் அவர் பேசியுள்ளார்.

மேலும் யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன்.

அருந்ததிராய்க்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்." என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக