கோலாலம்பூர்,அக்.28:இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக