டெல்லி: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரேஷ் குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெய்ப்பூரில் ரகசியக் கூட்டம் போட்டனர். அதில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை, ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் குண்டு வெடித்தது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
ரம்ஜான் மாதத்தின் 3வது நாள் நோண்பை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்று கூடி முடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
பள்ளிக் கூட பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிக்கை குறித்து இந்திரேஷ் குமார் கூறுகையில், இது எனக்கு எதிரான, காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இது அரசியல் சதி வேலை . விசாரணை அமைப்பை எனக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
நாங்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. அது எங்களது கொள்கைக்குப் புறம்பானது. நீதிக்காக கோர்ட்டை நான் நாடுவேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக