புதன், 3 நவம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்த முடியாது - இடித்தவர்கள் தண்டிப்பட்டாக வேண்டும்: சோனியா காந்தி

.

டெல்லி,நவ.3:அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை. எனவே மசூதியை இடித்தவர்களை தண்டித்தேயாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று ஒரு நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியா பேசும்போது; 2010ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி காங்கிஸ் கட்சியின் நிலைக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று ஆணித்தரமாக கூறியிருந்தோம்.

பாபர் மசூதி இடிப்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை, அதை சரி என்று கூறவில்லை. இது ஒரு அவமானகரமான, குற்றவியல் நடவடிக்கை. இதில் சம்பந்தப்பட்டவகர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.தீர்ப்புக்கு முன்பு நாடு எந்த அளவுக்கு பதட்டமாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக் காத்தனர்.

அனைத்து வகையான மதவாதங்களையும் எதிர்த்து நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இனவாதம், மதவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அதை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற இந்தியாவைக் கட்டிக் காக்க அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக